தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர்
சென்னை அயனாவரத்தில் காவல்துறையினர் கடந்த 20ம்தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை 4.30மணியளவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கையில், அவர்கள் வண்டியில் வைத்திருந்த இரும்பு ராடை கொண்டு உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில் சங்கருக்கு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நடத்திய விசாரணையில் அந்த 3பேர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடிகள் பெண்டு சூர்யா, கெளதம், சிவா என்பது தெரியவந்துள்ளது. கெளதம், சிவா ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பெண்டு சூர்யா அவரது அக்கா வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்திய பெண் உதவி ஆய்வாளர் மீனா
அதன்பேரில், அயனாவரம் பெண்காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் தலைமைக்காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அங்குசென்று சூர்யாவை கைது செய்துள்ளனர். வரும்வழியில் சூர்யா சிறுநீர் கழிக்கவேண்டும் என்று கூறியதால் வண்டியை நிறுத்தியுள்ளார்கள். இதனையடுத்து சூர்யா தப்பியோட, அவரை விரட்டிக்கொண்டு சரவணன், அமானுதீன், திருநாவுக்கரசு ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சூர்யா அங்கிருந்த கரும்புஜூஸ் கடையில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களை வெட்டியுள்ளார். இதில் அமானுதீன், ரவணன் பலத்தகாயம் அடைந்தனர். இதனால் தற்காப்புக்காக உதவிஆய்வாளர் மீனா சூர்யாவை முழங்காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளார். தற்போது சூர்யா மற்றும் காயமடைந்த இருகாவலர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். துப்பாக்கிசூடு நடத்தி ரவுடியை பிடித்த மீனாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.