சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
சென்னையில் காவல்துறையினர் புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தினமும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வோர், அதிவேக பயணம் செய்வோருக்கு இவர்கள் அபராதம் விதித்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி அயனாவரம் பழைய காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சங்கர்(49) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று(பிப்.,19) வழக்கம்போல் அப்பகுதியில் சக காவலாளர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரும்பு ராடால் தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து அவர்கள் தங்கள் வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து சங்கரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் சங்கர் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டதோடு, காது மற்றும் முகத்திலும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சங்கரை சக காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளரை தாக்கி விட்டு தப்பிச்சென்ற அந்த அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.