
ராணுவ மருத்துவ சேவையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
இதன் மூலம் இவர் இந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்னும் சாதனையை படைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
விமானப்படையில் தொடர்ச்சியாக கடுமையாக பணியாற்றி இவர் இந்த பதவி உயர்வினை பெற்றுள்ளார்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவரது கணவரான கே.பி.நாயரும் ஏர் மார்ஷல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.
இதன் மூலம் இவர்கள் ஏர் மார்ஷல் பதவியினை வகித்த தம்பதி என்னும் பெருமையையும் பெற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
பதவி
விமான படையின் விசிஷ்ட சேவா பதக்கம் வென்ற சாதனா சக்சேனா
ராணுவ மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர் கடந்த 1985ம் ஆண்டு இந்திய விமான படையில் சேர்ந்துள்ளார்.
குடும்ப மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா விமான படையின் விசிஷ்ட சேவா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சிறப்பாக சேவையாற்றி பெற்றுள்ளார்.
மேலும், மேற்கு விமான பயிற்சி படையில் முதன்மை மருத்துவத்தின் முதல் பெண் அதிகாரி என்னும் பெருமையும் இவருக்கு உள்ளது.
இதனிடையே, இவருக்கு ஏர் மார்ஷலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது இந்திய ராணுவத்தில் பணிபுரியும் மற்ற பெண் அதிகாரிகளுக்கு ஓர் உத்வேகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.