உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம்
உத்தரப்பிரதேசம் வழியே சென்ற டெல்லி-சஹர்சா வைசாலி விரைவு ரயிலானது இன்று(நவ.,16)அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதன்படி அதிகாலை 2.12 மணிக்கு உத்தரப்பிரதேசம் எட்டவா பகுதியருகே சென்று கொண்டிருந்த இந்த விரைவு ரயிலின் எஸ்.6.,பெட்டியிலிருந்து கரும்புகை வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட பயணிகள் சிலர் அளித்த தகவலின்பேரில் இந்த ரயில் மெயின்பூரி ரயில் நிலையம் முன்னதாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உடனே சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் பின்னர் எஸ்.6 பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீ, ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அணைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டி மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த ரயில் தனது பயணத்தினை காலை 6 மணிக்கு தொடர்ந்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் என்ன?என்பது இன்னும் கண்டறியப்படவில்லை
மேலும், இந்த தீ விபத்தில் 19 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுள் 11 பேர் மேல் சிகிச்சைக்காக சாய்ஃபை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன?என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதனிடையே இந்த விபத்து குறித்து பேசிய ஆக்ரா ஜிஆர்பி காவல் கண்காணிப்பாளர், "இந்த விபத்தில் இதுவரை எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. காயமடைந்தோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார். முன்னதாக நேற்று(நவ.,15)மாலை உத்தரப்பிரதேசம் வழியே சென்ற டெல்லி-தர்பங்கா விரைவு ரயில் எட்டவா அருகே செல்கையில், 3 பெட்டிகளில் தீ பிடித்து எரிந்த விபத்தில், பெட்டிகள் சேதமடைந்த நிலையில், 8 பேருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.