திருச்சி-குஜராத் செல்லும் 'ஹம்சஃபர்' ரயிலில் திடீர் தீ விபத்து
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்கா நகர் வரை இயங்கி வரும் ரயில் தான் 'ஹம்சஃபர் விரைவு ரயில்'. இந்த ரயிலானது வழக்கம்போல் திருச்சியில் இருந்து இன்று(செப்.,23) புறப்பட்டு கங்கா நகர் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருக்கையில் திடீரென தீ பிடித்துள்ளது. ரயிலின் எஞ்சின், அதன் பின்புறமுள்ள பி 1 என்னும் 2 பெட்டிகள் உள்ளிட்டவற்றில் இந்த தீயானது பரவி எரியத்துவங்கியுள்ளது. ரயிலின் எஞ்சின் மற்றும் பி1 பெட்டிகள் தீப்பற்றி எரிவதை கண்டு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஆய்வுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை
இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வேத்துறை ஊழியர்கள் ரயிலின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாத வண்ணம் தீப்பற்றிய எஞ்சின் மற்றும் பி1 என்னும் 2 பெட்டிகளை, பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது. அந்த ரயிலில் பயணித்த பயணிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், இந்த திடீர் தீ விபத்து ரயிலில் எவ்வாறு ஏற்பட்டது? என்பது குறித்த காரணத்தினை ரயில்வே துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.