
தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின் போது தன் உரையை தொடங்கிய திமுக எம்பி அப்துல்லா ஒரு தமிழ் பழமொழியைக் கூறினார்.
அப்போது அப்துல்லா கூறிய பழமொழி தவறு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாதிட்டார்.
"மாண்புமிகு தலைவர் அவர்களே. நான் ஒரு பிரபலமான தமிழ் பழமொழியோடு என் உரையை தொடங்க விரும்புகிறேன். மேற்கோள்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்பதால் இதை சொல்ல விரும்புகிறேன். 'ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க'" என்றார் எம்பி அப்துல்லா.
அப்போது இடைமறித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஆடு மேய்க்க" என்று அவரை திருத்தினார்.
டெல்லி
நிதியமைச்சரை 'அக்கா' என்று அழைத்து பேசிய திமுக எம்பி
'இல்லை அது அப்படியில்லை' என்று அப்துல்லா அதற்கு வாதாடினார்.
அதை கேட்ட நிதியமைச்சர், "எதுகை மோனை. அது அப்படி தான் வரும்." என்று முழு பழமொழியையும் சொல்லி காட்டினார்.
அதற்கு சிரித்து கொண்டே பதிலளித்த திமுக எம்பி, "ஒருவேளை, திருச்சியில் அப்படி இருக்கலாம் அக்கா! புதுக்கோட்டையில் கழுத மேய்க்க என்பது தான் சரி. ஊருக்கு ஊர் அது மாறும்" என்றார்.
உடனே, "ஊருக்கு ஊர் அது மாறாது. அது எதுகை மோனை அப்படி தான் வரும்" என்று நிதியமைச்சர் கூறினார்.
அதற்கு, "சரி ஆடு என்றே வைத்து கொள்ளலாம்" என்ற அப்துல்லா சிரித்து கொண்டே தன் உரையை தொடர்ந்தார்.
இந்த வாக்குவாதத்தால் மாநிலங்களவை முழுக்க சிரிப்பொலி பரவியது.