சத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி கிளை கண்டுபிடிப்பு; பல லட்சங்களை இழந்த மக்கள்
வங்கி மோசடி தொடர்பான அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தில், சத்தீஸ்கர் மாநிலம் சபோரா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) போலி கிளை கண்டுபிடிக்கப்பட்டது. வேலையில்லாத தனிநபர்களையும் உள்ளூர் கிராம மக்களையும் ஏமாற்றுவதற்காக, வங்கிக்கு தேவையான பொருட்கள், கவுன்ட்டர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் முழுமையான போலிக் கிளையை குற்றவாளிகள் அமைத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 27 அன்று, டாப்ராவில் சட்டபூர்வமாக இயங்கி வரும் ஒரு எஸ்பிஐ கிளையின் மேலாளர் இதையறிந்து சந்தேகமடைந்ததை அடுத்து, காவல்துறை மற்றும் எஸ்பிஐ அதிகாரிகள் தலையிட்டதையடுத்து விஷயம் வெளியே தெரிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த போலி வங்கி வெறும் 10 நாட்கள் மட்டுமே செயல்பட்டதால், குறைவான மக்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணம் வாங்கிக் கொண்டு வேலை கொடுத்த மோசடி பேர்வழிகள்
மோசடியில் ஈடுபட்டவர்கள் ஆறு நபர்களை தங்கள் போலி வங்கி கிளையில் வேலைக்கு சேர்த்தனர். அவர்களுக்கு மேலாளர்கள், காசாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரிகள் போன்ற பாத்திரங்களை வழங்கினர். எஸ்பிஐ அரசு வங்கி என்பதால், தங்கள் நியமனங்களுக்கு ₹2 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை செலுத்தி இந்த போலியான வேலைக்கு சேர்ந்துள்ளனர். இந்த கிளை கிராம மக்களையும் குறிவைத்தது. அவர்கள் அறியாமல் போலி வங்கியில் கணக்குகளைத் தொடங்கி பரிவர்த்தனைகளை நடத்தத் தொடங்கினர். இதற்கிடையே, உள்ளூர் கிராமவாசியான அஜய் குமார் அகர்வால், டாப்ரா கிளை மேலாளரிடம் முறைகேடுகளைப் புகாரளித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை அம்பலமானது. இதையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.