கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.
கடந்த 13ம் தேதி எக்கியர்குப்பம் மீனவர் பகுதியினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளார்கள்.
அந்த சாராயத்தினை குடித்த சில மணி நேரங்களிலேயே வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்றவைகள் ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இவர்களுள் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று(மே.,16) காலை நிலவரப்படி, கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியானது.
கள்ளச்சாராயம்
சிறந்த சிகிச்சையினை அளித்திட வேண்டும் என்று முதல்வர் உத்தரவு
இதனிடையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்துள்ளார்.
இதனால் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 14ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையினை தடுக்க வலியுறுத்தி சரவணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதற்கிடையே கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சென்றார்.
அதன்பின் அவர், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரிக்கும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அவர், கள்ளச்சாராயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறந்த சிகிச்சையினை அளித்திட வேண்டும் என்று மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.