தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தற்போதைய நிதி அமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
இவரது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கப்பட்டு புதுக்கோட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய நிர்வாகியிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில் குமார் மக்கள் நீதி மய்யம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல அமைப்பாளராக உள்ளார்.
இவரது இன்ஸ்ட்டாகிராம் கணக்கிற்கு தமிழக நிதியமைச்சர் பெயரில் ப்ரொபைலில் படத்தோடு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.
செந்தில் குமாரியிடம் மிக சகஜமாக நன்றாக உள்ளீர்களா? என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதன் பின்னர், அவசர தேவைக்காக ரூ.13,500 பணம் தேவைப்படுகிறது, உடனடியாக அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார்.
எச்சரிக்கையாக இருங்கள்
பொது மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்
தமிழக நிதியமைச்சர் நம்மிடம் பணம் கேட்கிறாரே என்று அதிர்ந்த செந்தில் குமார், பின்னர் சுதாரித்து கொண்டு, இது போலி கணக்கு என்று அறிந்துகொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசில் இது குறித்து செந்தில் குமார் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில், போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற சைபர் க்ரைம் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
மாவட்ட ஆட்சியர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பெயரில் இது போன்று போலி கணக்குகள் துவங்கப்பட்டு, பணம் கேட்ட சம்பவங்கள் முன்னரே பல முறை அரங்கேறியுள்ளது.
எனவே பொது மக்கள் இது குறித்த விழிப்புணர்வுடன், எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.