
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், பள்ளிகள் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக பள்ளிக் கல்விதத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னர் அறிவிக்கப்பட்டபடி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், வானிலை நிலைமைகளின் அடிப்படையில் முடிவு மாற்றத்திற்கு உட்பட்டது என்று கூறினார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (மே 16) 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், கோடை வெப்ப நிலையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.
மேலாண்மைக் குழு
காலநிலை மேலாண்மைக்குழுவின் பரிந்துரை
தற்போதைய வானிலை முறைகளை மதிப்பிடுவதற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் தமிழக முதல்வர் அலுவலகத்தில் உள்ள மாநில காலநிலை மேலாண்மைக் குழு பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், "வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக இருந்தால், குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பள்ளி குழந்தைகளின் நலன் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து நிலவும் வெப்பம் காரணமாக பள்ளிகள் மீண்டும் திறக்க தாமதமாகும் வாய்ப்பு அதிகரித்து வருவதால், அமைச்சரின் அறிக்கை பள்ளி மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், 10 ஆம் வகுப்பு முடிவுகள் கடந்த ஆண்டை விட ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.