வாட்ஸ்அப் டிபியை மாற்றி கைவரிசை: முன்னாள் பிரதமரின் மகனிடமே ரூ.7.68 கோடி சுருட்டிய மோசடி கும்பல்! பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
தலைநகர் டெல்லியில் மிக உயர்தர விஐபி குடும்பத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட பிரம்மாண்ட ஆன்லைன் நிதி மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜராலின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான நரேஷ் குஜரால், சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டு ரூ.7.68 கோடி இழந்துள்ளார். இந்த நவீன பாஸ் மோசடி குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்பு சைபர் கிரைம் பிரிவான ஐஎஃப்எஸ்ஓ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் அடையாள மிரட்டல் மூலம் நடந்த ஏமாற்று வேலை
டெல்லியின் ஓக்லா பகுதியில் ஜவுளி மற்றும் தோல் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை 78 வயதான நரேஷ் குஜரால் நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 12 அன்று, இவரது நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரிக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது. அந்த எண்ணின் சுயவிவரப் படத்தில் நரேஷ் குஜராலின் புகைப்படம் இருந்துள்ளது. நரேஷ் குஜரால் பேசுவதாக நினைத்து நிதி அதிகாரி அந்த எண்ணை அழைக்க முயன்றபோது, முக்கியக் கூட்டத்தில் இருப்பதால் பேச முடியாது எனப் பதில் வந்துள்ளது. அவசர வணிகத் தேவைக்காகக் குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளுக்கு உடனடியாகப் பணம் அனுப்ப வேண்டும் என்று அந்த வாட்ஸ்அப் கணக்கு மூலம் அடுத்தடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பணப்பரிமாற்றம்
நான்கு நாட்களில் பரிமாறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்
நிறுவனத்தின் உரிமையாளரான நரேஷ் குஜரால் தான் தனக்குக் கட்டளையிடுகிறார் என்று முழுமையாக நம்பிய நிதி அதிகாரி, ஆர்ஜடிஎஸ் பணப் பரிவர்த்தனை முறை மூலம் நான்கு நாட்களில் நான்கு வெவ்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.7.68 கோடியை அனுப்பியுள்ளார். இந்த பிரம்மாண்ட பரிவர்த்தனைகள் குறித்து வங்கித் தரப்பில் இருந்து நிறுவனத்தின் நிதிப் பிரிவுக்குத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தக் கோரிய போதும், அது உண்மையான பரிவர்த்தனைதான் என நிதி அதிகாரி அனுமதியளித்துள்ளார். இதனால் மோசடி கும்பல் திட்டமிட்டபடி நிறுவனத்தின் கணக்கில் இருந்த பணத்தைச் சுருட்டியுள்ளது.
மோசடி அம்பலம்
மகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பிரம்மாண்ட மோசடி
இந்த மோசடி நாடகம் கடந்த ஜூன் 16 அன்று தான் வெளிச்சத்திற்கு வந்தது. நிதி அதிகாரி இந்த கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் குறித்து நரேஷ் குஜராலின் மகள் தீக்ஷாவிடம் பேசியுள்ளார். தனது தந்தைக்குச் திடீரென இவ்வளவு பெரிய தொகை ஏன் தேவைப்பட்டது என்ற சந்தேகத்துடன் தீக்ஷா தனது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால், தான் அப்படி எந்த ஒரு பணப் பரிவர்த்தனை உத்தரவையும் யாருக்கும் பிறப்பிக்கவில்லை என்று நரேஷ் குஜரால் அதிர்ச்சியூட்டும் உண்மையைக் கூறினார். அதன் பின்னரே தங்களது நிறுவனத்தின் நிதி அதிகாரி ஒரு சைபர் கும்பலிடம் ஏமாந்து போனதை அவர்கள் உணர்ந்தனர்.
போலீஸ் நடவடிக்கை
டெல்லி போலீசாரின் அதிரடி நடவடிக்கை மற்றும் மீட்பு
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணான 1930 மூலம் புகார் அளித்தனர். விரைந்து செயல்பட்ட டெல்லி காவல்துறையின் ஐஎஃப்எஸ்ஓ பிரிவினர், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளைக் கண்காணித்து முடக்கினர். மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ.7.68 கோடியில், சுமார் 70 சதவீத தொகையை (ரூ.4.28 கோடி) பல்வேறு வங்கிக் கணக்குகளில் லியன் முறையில் முடக்கி டெல்லி போலீசார் சாதனை படைத்துள்ளனர். எஞ்சிய தொகையை மீட்கவும், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட போலி கணக்குகளை இயக்கிய மோசடி கும்பலைத் தேடவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.