மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக சர்ச்சை
மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் இல்லை என்று சிவசேனா(யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அந்த வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி பெற்ற வேட்பாளரின் உறவினர் மொபைல் போனை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அந்த தொகுதியில் வெற்றி பெட்ரா ரவீந்திர வைகரின் மைத்துனர் மங்கேஷ் பாண்டில்கர், வாக்குகள் எண்ணப்படும் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திறக்க மொபைல் போனை பயன்படுத்தியதாக ஊடக அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால், தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி மற்றும் மும்பை போலீசார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
வாக்குச்சாவடி அதிகாரி மீது வழக்கு பதிவு
இந்த தேர்தலில் ரவீந்திர வைகர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் மும்பை வடமேற்கு தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்ற செய்திகள் வெளியானதும், மக்களவை உறுப்பினராக சிவசேனா தலைவர் ரவீந்திர வைகர் பதவியேற்பதை நிறுத்த வேண்டும் என்று சிவசேனா(யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தடையை மீறி தொலைபேசிகளை அனுமதித்ததற்காக மங்கேஷ் பாண்டில்கர் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரி தினேஷ் குரவ் ஆகியோர் மீது சட்டப்பிரிவு 188ன் கீழ், வன்ராய் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி இருந்தால் பாஜக வெறும் 40 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் என்று ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.