2024 நாடாளுமன்ற தேர்தலினையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம்
தமிழ்நாடு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அவர்கள் இன்று(ஜூன்.,27) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், "தமிழகத்தில் 2024ம்ஆண்டில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலினை நடத்த போதுமான அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், லிவிபேட் கருவிகளும் உள்ளன" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் லிவிபேட் இயந்திரங்கள் தேர்தலுக்கு முன்னதாக சரியான நிலையில் இருத்தல் மிக அவசியம். அதில் ஏதேனும் கோளாறுகள் இருக்கும் பட்சத்தில், அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான சரிபார்ப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் 4ம்தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டு நடைபெறவுள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.