தினமும் 5,500 குழந்தைகள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்
ஒவ்வொரு நாளும் 5500 குழந்தைகள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் இதனால் இவர்களில் மூன்றில் ஒருவருக்கு புற்றுநோய், இதய பிரச்சனை, பக்கவாதம், ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் நரேஷ் புரோஹித், புகைபிடித்தல் மற்றும் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தொடர் மருத்துவக் கல்வி (CME) நிகழ்ச்சியில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய புரோஹித், உலகிலேயே புகையிலை நுகர்வதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தேசம் இந்தியா தான் என்று கூறினார். சுவாச பிரச்சனைகள் மற்றும் இதய பிரச்சனை உள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருக்கின்றனர் என்றும் அவர் அவர் கூறியுள்ளார்.
100 சதவீதம் புகை இல்லாத சூழலை உறுதி செய்ய வேண்டும்
இளைஞர்களும் கல்வியறிவற்றவர்களும் பீடிகள் மற்றும் ஹூக்காக்களுக்கு பதிலாக சிகரெட்டுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். அதேவேளையில் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் சிகரெட்டுகளுக்கு பதிலாக சிகார்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். புகையிலை-குறிப்பிட்ட நைட்ரோசமைன்கள்(TSNAs) அதிகம் இருக்கும் இதை பயன்படுத்துவதால் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். புகைபிடித்தல், நுரையீரல் செயல்பாட்டை மோசமாக்குகிறது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் புரோஹித் கூறினார். 100 சதவீதம் புகை இல்லாத சூழலை உறுதி செய்வதற்காக ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள அனைத்து புகைபிடிக்கும் பகுதிகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.