LOADING...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் செலவு எவ்வளவு தெரியுமா? நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சமாம்!
மழைக்காலக் கூட்டத்தொடரில் இதுவரை எந்த முக்கியமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் செலவு எவ்வளவு தெரியுமா? நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சமாம்!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2025
04:08 pm

செய்தி முன்னோட்டம்

2025 ஆம் ஆண்டின் மழைக்காலக் கூட்டத்தொடரில் பரபரப்பான காட்சிகள் நாடாளுமன்றத்தை ஆட்கொண்டு இருந்தாலும், இதுவரை எந்த முக்கியமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது கவலையளிக்கிறது. முக்கியமான மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, வரிவிதிப்பு சட்டத் திருத்தம், இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்தம், மற்றும் தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா போன்றவை வரிசையாக விவாதத்திற்காக காத்திருந்தாலும், அமர்வுகள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுவதால் எந்த தீர்வுகளும் அமையவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்ற அமர்வுகளின் செயலிழப்பால் ஏற்படும் பொருளாதார இழப்பு குறித்தும் வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து 2012ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிவரம் ஒத்திவைப்புகளுக்காக ஆகும் செலவை பற்றி ஒரு பார்வையை வழங்குகிறது.

செலவு

ஒரு நிமிட நாடாளுமன்ற அமர்வின் செலவு ரூ. 2 லட்சத்திற்கும் மேல்

அப்போதைய(2012) நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் பன்சால், ஒரு நிமிட நாடாளுமன்ற அமர்வுக்கு ரூ.2.5 லட்சம் செலவாகிறது என்று உருக்கமாக தெரிவித்திருந்தார். இந்த எண்ணிக்கை 2012ஆம் ஆண்டுக்கே உரியது-ஆனால் அதற்குப்பிறகு எந்த அதிகாரப்பூர்வ புதுப்பித்தலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2025இல் பணவீக்கம், நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றால் இந்தச் செலவு ஏற்கனவே இருமடங்கை தாண்டி இருக்கலாம் என்பது நிபுணர்கள் கருத்து. PRS சட்டமன்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி: தற்போது 17வது மக்களவை அமர்வு மொத்தம் 230 நாட்கள் மட்டுமே இதுவரை நடந்து இருக்கிறது. தற்போதைய நிகழ்ச்சிகளின் அடிப்படையில், 331 நாட்களுக்கும் கீழே இந்த மக்களவை கூட்டம் அமைய வாய்ப்பு அதிகம்-இது 1952க்குப்பிறகு மிகக் குறைந்த நாட்கள் செயல்பட்ட மக்களவை கூட்டத்தொடராக அமையும்.

மக்கள் பணம்

விரயமாகும் மக்கள் பணத்திற்கு யார் பொறுப்பு?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களுக்காக சட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் முக்கிய பணி. ஆனால், ஒவ்வொரு கூட்டத்தொடரும் பரஸ்பர குற்றச்சாட்டுகள், கூச்சல்களால் வீணாகும்போது, அதன் நிதிச் சுமை நேரடியாக மக்கள் மீதே விழுகிறது. ஒரு நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் என்ற 2012-இன் மதிப்பீடு இன்று ரூ.4 லட்சம் அல்லது அதற்கும் மேலாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. அதாவது, ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டால், ₹2.4 கோடி வரை நாடு இழக்கிறது! பணவீக்கம் உயர்ந்துள்ள இந்நேரத்தில், நாடாளுமன்ற செயலிழப்புகள், அதன் நேர, பண செலவுகளுடன் மக்கள் நலன்களைத் தடுக்கிற ஒரு சுமையாகவே மாறுகின்றன.