இணையப் பாதுகாப்பில் இந்தியாவைப் பின்பற்றிய ஐரோப்பிய ஒன்றியம்.. மத்திய அமைச்சர் கருத்து!
சமூக வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை நெறிமுறைப்படுத்துவதற்கான 'டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை' ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு கொண்டு வந்தது. சமூக வலைத்தள சேவை நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் தகவல்களை ஆய்வு செய்து, தேவையான நேரங்களில் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இதே போன்ற திருத்தங்களுடன் கூடிய விதிமுறைகளை அமல்படுத்தியிருந்தது. இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "இணையத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவைப் பின்பற்றியிருக்கிறது" எனக் கூறியிருக்கிறார். மேலும், டிஜிட்டல் இந்தியா சட்டம் குறித்த தன்னுடைய கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா சட்டம்:
நாளுக்கு நாள் மாறி வரும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய சட்டங்களை உலக நாடுகள் அமல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலும் இணையத்தை பாதுகாப்பான வகையில் மாற்றவும், இந்தியா விரைவாக 1 ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடையவும் உலக தரத்திலான இணையச் சட்டங்கள் தேவை, எனக் கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். இதற்காகவே டிஜிட்டல் இந்தியா சட்டம் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் இந்த சட்டமானது சந்தையின் தேவைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் வகையில் இருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சட்டமானது பிரதமர் மோடியின் டிஜிட்டல் 'இந்தியா இலக்குகள் 2026'-ஐ அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.