ரூ.125க்கு விற்க வேண்டிய பெட்ரோல் ரூ.95க்கு கிடைக்க காரணம்! எத்தனால் கலப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் தீவிரமடைந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 135 டாலராக உயர்ந்திருந்த போதும், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயராமல் ரூ.94.77 என்ற அளவிலேயே கட்டுக்குள் இருந்ததற்கு 20 சதவீத எத்தனால் கலப்பு (E20) கொள்கையே முக்கியக் காரணம் என மத்திய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், மத்திய அரசு இந்தத் தெளிவுரையை வெளியிட்டுள்ளது.
சேமிப்பு
மக்களுக்கு லிட்டருக்கு ரூ.30 வரை சேமிப்பு
இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 20 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எத்தனால் கலக்கப்படுவதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரிக்கும் போது அதன் நேரடித் பாதிப்பிலிருந்து இந்திய நுகர்வோர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
எத்தனால் கலப்பு கொள்கை நடைமுறையில் இல்லையென்றால், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.125 வரை உயர்ந்திருக்கும்.
ஆனால், முன்வரையறுக்கப்பட்ட விலையில் எத்தனால் பெறப்பட்டதால் மக்களுக்கு லிட்டருக்கு சுமார் ரூ.30 வரை சேமிப்பு கிடைத்ததுடன், பெட்ரோல் விலையும் ரூ.95 என்ற நிலையான அளவிலேயே நீடிக்க முடிந்தது.
அரசு மறுப்பு
ரேஷன் அரிசி திருப்பி விடப்படுகிறதா?
எத்தனால் உற்பத்திக்காக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான ரேஷன் அரிசி மற்றும் உணவு தானியங்கள் திருப்பி விடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு முற்றிலும் மறுத்துள்ளது.
உணவுப் பொருள் கழகத்தின் கீழ் மனிதர்கள் உட்கொள்ளத் தகுதியற்ற கெட்டுப்போன தானியங்கள் மற்றும் உடைசல் அரிசி மட்டுமே எத்தனால் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஏழைகளின் உணவில் எந்தவொரு சமரசமும் செய்யப்பட வில்லை என்றும், வீணாகும் தானியங்களை எரிபொருளாக மாற்றி நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கம் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
விளக்கம்
மைலேஜ் குறைவு மற்றும் வாகன பராமரிப்பு குறித்த விளக்கம்
2023க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் மைலேஜ் லேசாகக் குறைவதாகவும், எஞ்சின் பராமரிப்பு செலவு அதிகரிப்பதாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு அரசு பதிலளித்துள்ளது.
எத்தனால் கலப்பினால் மைலேஜில் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டாலும், சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து நாட்டிற்குப் பாதுகாப்பு அளிப்பது மற்றும் வெளிநாட்டு சந்தையை நம்பியிருப்பதைத் தடுப்பது போன்ற ஒட்டுமொத்த நன்மைகள் மிக அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் கலப்பு என்பது வரி செலுத்துவோரின் மானியம் அல்ல, அது இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு காப்பீடு என அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.