
சாதி பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டேன் - ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார்
செய்தி முன்னோட்டம்
சென்னை ஆட்சியராக இருந்து கொரோனா மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலத்தில் அதிவேகமாக செயல்பட்டு மக்கள் மத்தியில் பரீட்சையமானவர் ககன்தீப் சிங் பேடி.
இவர் தற்போது சுகாதாரத்துறை செயலாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவர் தன்னை தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தினை தூண்டும் அளவிற்கு துன்புறுத்தியதாக தற்போதைய ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர்.மனீஷ் நரனவாரே ஐஏஎஸ் அதிகாரி தலைமை செயலாளருக்கு 2 பக்கஅளவில் புகார் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அதில் அவர், "ஜூன்.14.2021 முதல் ஜூன்.12.,2022வரை சென்னை துணைச்சுகாதார ஆணையராக இருக்கையில் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை இக்கடிதம் மூலம் நான் பகிர்ந்துக்கொள்கிறேன்.
நான் குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவன் என்பதை தெரிந்துக்கொண்ட அவர், எனக்கு பணிநிமித்தமாக பல தொல்லைகளை கொடுத்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை
தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
தொடர்ந்து அவர் கூறியுள்ளதாவது,"ஒரு கையெழுத்துக்காக மணிக்கணக்கில் என்னை காக்க வைப்பார்.
ஒரு வழியாக அவரை சந்தித்தால், தற்போது லேட் ஆகிவிட்டது, நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிடுவார்.
இந்தூருக்கு ஒருமுறை அவருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுதும், புத்த மதத்தினை பின்பற்றும் நீ எதற்காக உஜ்ஜயின் கோயிலுக்கு செல்கிறாய்? என்று கேள்வியெழுப்பி என்னை மனமுடைய செய்துள்ளார்.
இரவு 8.30மணிக்கு சுடுகாடு பகுதியில் ஏதேனும் தவறு நடக்கிறதா என்று ஆய்வு செய்யும்படி கூறி அனுப்புவார்.
எனக்கும், எனது மூத்த அதிகாரிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட காரணமாய் இருந்துள்ளார்.
இவர் செய்த கொடுமைகள் அனைத்தும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும். அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறேன்" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.