முக்கிய தலைவர்களின் மொபைல்களை ஒட்டுக்கேட்டதா சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி? திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்
இதற்கு முன்பு தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் அரசு, தற்போதைய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநில காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்தி பிஆர்எஸ் அரசு, முக்கிய பிரபலங்களை ஒட்டு கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிஆர்எஸ் இன்னும் பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவில் உள்ள மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பிரபாகர் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ரேவந்த் ரெட்டியின் வீட்டுக்கு அருகே அலுவலகம் அமைத்து ஒட்டுக்கேட்ட அதிகாரிகள்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஜங்க ராவ் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருப்பத்தண்ணா ஆகிய இரண்டு மூத்த அதிகாரிகள், சட்டவிரோதமாக கண்காணித்ததாகவும் ஆதாரங்களை அழித்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அப்போதைய பிஆர்எஸ் அரசாங்கத்தின் கீழ் மாநில புலனாய்வுப் பணியகத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த ரவி பால், முதல்வர் ரேவந்த் ரெட்டியின் உரையாடல்களைக் கேட்பதற்காக அவரது வீட்டிற்கு அருகில் தொலைபேசி ஒட்டுக்கேட்கும் கருவிகளை அமைத்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒட்டு கேட்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இஸ்ரேலில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரவி பால், ரேவந்த் ரெட்டியின் வீட்டிற்கு அருகில் அலுவலகம் அமைத்து, அந்த சாதனத்தை நிறுவியதாக பேசப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.