
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் எஃகு வளைவு இடிந்து விழுந்தது: 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள அனல் மின் நிலைய கட்டுமானத் தளத்தில் இன்று ஒரு பயங்கர விபத்து நடந்தது. எஃகு வளைவு இடிந்து விழுந்ததில் ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) தலைவர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன், "உயிரிழந்த தொழிலாளர்கள் அசாம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். BHEL அதிகாரிகள் தற்போது சம்பவ இடத்தில் உள்ளனர். விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.
நிவாரண அறிவிப்பு
பிரதமர் மோடியின் நிவாரண அறிவிப்பு
விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள், உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னையில் நடந்த கட்டிடம் இடிவு விபத்து மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெறட்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.