பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்
2023-2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்விற்கான மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் இன்று(ஜூன்.,26)வெளியானது. இப்பட்டியலினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு பேசுகையில், "1,87,847 பேருக்கு இந்தாண்டு மதிப்பெண் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி சென்ற ஆண்டினை விட இந்தாண்டு 18 ஆயிரம் மாணவர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளார்கள்" என்று கூறியுள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் 31,445 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 15,136மாணவர்கள், 13,284மாணவிகள் மற்றும் இதர வகுப்பினை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு கல்லூரிக்கட்டணம், விடுதிக்கட்டணம் என எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்விற்கான பட்டியலில் இவ்வருடம் அரசு பள்ளி மாணவர்கள் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
200க்கு 200 மதிப்பெண்களை 102 மாணவர்கள் எடுத்துள்ளனர்
அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுள், சென்னை சைதாபேட்டையினை சேர்ந்த மகாலட்சுமி, 200க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடத்திலும், நாகப்பட்டின மாவட்டத்தினை சேர்ந்த நிவேதிதா என்பவர், இரண்டாம் இடமும், கோவை மாவட்டத்தினை சேர்ந்த சரவணகுமார் என்னும் மாணவர் மூன்றாம் இடத்தினையும் பிடித்துள்ளார்கள். மேலும் 200க்கு 200 மதிப்பெண்களை 102 மாணவர்கள் எடுத்துள்ள நிலையில், அதில் 100 பேர் மாநில கல்வியினை(State Board) பயின்றவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தினை திருச்செந்தூரை சேர்ந்த மகாலட்சுமி பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து, தர்மபுரியினை சேர்ந்த ஹரினிகா என்னும் மாணவி இரண்டாம் இடத்திலும், திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த ரோஷினி பானு என்பவர் 3ம் இடத்தினையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.