வாக்களிக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை(EVM) சுலபமாக ஹேக்கிங் செய்யலாம் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் கூறியுள்ளார். "அந்த இயந்திரங்கள் சிறியதாக இருந்தாலும், அவை மனிதர்கள் அல்லது AI ஆல் ஹேக் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்ட ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் என்பவரின் பதிவுக்கு பதிலளித்துள்ளார். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் புவேர்ட்டோ ரிக்கோவின் முதன்மைத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானது'
இது குறித்து பெரிதாக ஒரு ட்விட்டர் பதிவிட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "பாதுகாப்பான டிஜிட்டல் வன்பொருளை யாராலும் உருவாக்க முடியாது என்று பொதுப்படையாக" எலான் மஸ்க் கூறி இருப்பது சரியில்லை என்று அவர் கூறியுள்ளார். "அமெரிக்காவிற்கும் பிற இடங்களுக்கும் மஸ்க் சொல்வது பொருந்தக்கூடும். ஆனால், அங்கு அவர்கள் இணையத்துடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்க வழக்கமான கணினி தளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்திய EVMகள் தனிப்பயனாக்கப்பட்டவை, பாதுகாப்பானவை மற்றும் எந்தவொரு நெட்வொர்க்/மீடியாவுடனும் சம்பந்தப்படாதவை." என்று ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த சூடு பிடித்திரும் விவாதத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எலான் மஸ்க்கின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
'தேர்தல் செய்லபாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை': ராகுல் காந்தி
"இந்தியாவில் உள்ள EVMகள் ஒரு 'கருப்புப் பெட்டி' ஆக உள்ளது. அவற்றை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. நமது தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்த தீவிர கவலைகள் உள்ளன. நிறுவனங்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லாதபோது ஜனநாயகம் ஒரு போலியாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது." என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் முடிவுகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற, ஆளும் பாஜக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் "100% பாதுகாப்பானவை" என்று உறுதியளித்திருந்தார்.