லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம்
வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை முன்னிறுத்துவது குறித்து பாஜக ஆலோசித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. முகமது ஷமி, ரஞ்சி டிராபியில் பெங்கால் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதோடு அம்மாநிலத்திற்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். பிஜேபி தலைமை ஷமியிடம் இந்த திட்டத்தை அணுகியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. எனினும், இது குறித்து ஷமி இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. தற்போது, ஷமி அறுவை சிகிச்சையில் இருந்து மீள்வதற்காக ஓய்வில் உள்ளார். இந்தியாவின் ODI உலகக் கோப்பை பயணத்திற்குப் பிறகு ஷமி கிரிக்கெட் விளையாடவில்லை. தொடரில் நடந்த ஏழு போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை இறுதிப்போட்டிக்கு வர உதவினார்.
அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஷமி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அனைத்து வீரர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். போட்டியில் முகமது ஷமியின் பரபரப்பான ஆட்டத்தை பாராட்டி, அவரை கட்டிப்பிடித்தார் பிரதமர். கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோ அப்போது வைரலாக பரவியது. அதுமட்டுமின்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் ஷமி சந்தித்துப் பேசினார். இது தவிர, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஷமியின் சொந்த கிராமமான அம்ரோஹாவில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதாக அறிவித்தார். மேற்கு வங்காளத்தில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் ஷமியை களமிறக்குவது கட்சிக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று பாஜகவிற்குள் கருத்து நிலவுவதாக கூறப்படுகிறது.