ஸ்மிருதி இரானி, அண்ணாமலை, உமர் அப்துல்லா: 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்
தேர்தல் 2024: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜக வடஇந்திய மாநிலங்கள் பலவற்றிலும் வெற்றி பெற்றுள்ளது. எனினும் இது கடந்த தேர்தலை விட சற்று சறுக்கலான நிலையே. கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி அரசு, 343 தொகுதிகளில் வென்று அறுதி பெரும்பான்மை பெற்றது. ஆனால் இம்முறை 294 தொகுதிகளில் தான் முன்னிலை வகிக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடரும் நிலையில், மக்களின் தீர்ப்பு எப்படி உள்ளது என்பதை கணிக்க முடிகிறது. பெரும்பான்மையான இடங்களின் இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த பொதுத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வி நிலையில் உள்ளதை இப்போது வரை வெளியான வாக்குகளின் நிலவரம் காட்டுகின்றன.
அண்ணாமலை முதல் உமர் அப்துல்லா வரை
தமிழகத்தில் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். அவர், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை விட 51,000 வாக்குகள் பின்தங்கியுள்ளார். ராகுல் காந்தியை தோற்கடித்து 2019ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் ஸ்மிருதி இரானி, இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறார். காங்கிரஸின் கிஷோரி லால் சர்மாவை விட 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். மறுபுறம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக்கிடம் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் தோல்வி முகத்தில் தான் இருக்கிறார்.