தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பகால போக்குகளில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஹரியானாவில் கிட்டத்தட்ட பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கக் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) கூட்டணி அமோகமாக முன்னிலை வகிக்கிறது. முன்னதாக, ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், ஜம்மு காஷ்மீரில் என்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் கருத்துக் கணிப்புகள் கணித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக தற்போதைய சூழல் உள்ளது.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் முன்னிலையில் உள்ள கட்சிகளின் இடங்கள்
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் என்சி-காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும், பிடிபி மூன்று இடங்களிலும் முன்னணியில் உள்ளன. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 41 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக ஹரியானாவில் ஆட்சிக்கு எதிரான வலுவான எதிர்ப்பு அலை மற்றும் ஜாட் மற்றும் விவசாய சமூகத்தினரிடையே அதிருப்தி இருந்தபோதிலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. ஜாட் அல்லாத சமூகத்தினரிடையே அக்கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கி இந்தத் தேர்தலில் மாறியுள்ளதாகத் தெரிகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியுடனான உறவை முறித்துக் கொண்ட பாஜக இந்த முறை தனித்து போட்டியிட்டது.