
நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம்
செய்தி முன்னோட்டம்
இன்னும் 10 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வருகிறார்.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருவது இந்தாண்டில் இது ஆறாவது முறையாகும்.
பாஜக சார்பில் ஏற்கனவே, ஜேபி நட்டா, ஸ்ருதி இராணி, ராஜ்நாத் சிங் என அடுத்தடுத்து களம் இறங்கிய வேளையில், அடுத்ததாக பிரதமர் மோடியும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டிற்கு சென்று, அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
பிரதமர் மோடி
பிரதமரின் தமிழக பயணத்திட்டம்
பின்னர் விமானம் மார்கமாக அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 6:30 மணிக்கு வருகிறார். மாலை சென்னை பாண்டி பஜாரில் நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்கவுள்ளார்.
தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.
பின்னர் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார்.
அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார்.
அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்கிறார். அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு, நாளை மறுதினம் மாலை புறப்படுகிறார்.