2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கான 2024 பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல், ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். பீகார், ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் காலியாக உள்ள 26 சட்டசபை தொகுதிகளுக்கும் அதே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளுக்கு எதிர்ப்பு
தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அரசியல் கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் நன்னடத்தையை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். வெறுப்புப் பேச்சுகள் குறித்தும் தேர்தல் ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "பிரச்சனைகளை தீர்ப்பது அடிப்படையிலான பிரச்சாரம் இருக்க வேண்டும், வெறுப்பு பேச்சுகள் கூடாது. ஜாதி அல்லது மத அடிப்படையில் பேசக்கூடாது, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்கக்கூடாது," என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். ஊடகங்கள் எப்போது அரசியல் விளம்பரங்களை வெளியிடுகின்றன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவற்றை செய்திகளாக மறைக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார். இந்த விவகாரங்களை கண்காணிக்க ஆணையம் 2,100 ஆலோசகர்களை பணியமர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.