
பீகாரில் நவம்பர் 22க்கு முன்பு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஈடுபட்டுள்ளது. தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டங்களை ஆணையம் நடத்தி வருகிறது. சனிக்கிழமை (அக்டோபர் 4) அன்று, ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டியது. அதாவது, முக்கியப் பண்டிகையான சத் பண்டிகை முடிந்த பிறகு தேர்தலை நடத்த வேண்டும் மற்றும் தேர்தலை குறைந்தபட்ச கட்டங்களில் (முன்னுரிமையாக ஒன்று அல்லது இரண்டு) நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஒரே கட்டம்
ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தல்
குறிப்பாக, ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 2024 மகாராஷ்டிரா தேர்தலைப் போல பீகார் தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்தும்படி ஆணையத்தை வலியுறுத்தியது. இதற்கு முன்னர் பீகாரில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பாஜகவும் ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாகத் தேர்தலை நடத்த ஆதரவளித்தது. இருப்பினும், புர்கா அணிந்து வரும் பெண் வாக்காளர்களை அடையாளம் கண்டு சரிபார்க்க வேண்டும் என்று பாஜக முன்வைத்த கோரிக்கையை ராஷ்ட்ரிய ஜனதா தளம், இது அரசியல் தந்திரம் எனக் கூறி கடுமையாக விமர்சித்தது. அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைகளைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தயார்நிலையை ஆய்வு செய்தது.
கூட்டம்
தயார் நிலை குறித்து கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை அன்று, நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை மறுஆய்வு செய்ய, வருமான வரித் துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அமலாக்க முகமைகளுடன் ஆணையம் முக்கியக் கூட்டங்களை நடத்தியது. மேலும், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளுடன் ஒட்டுமொத்த மாநில ஒருங்கிணைப்பை மதிப்பிடுவதற்கான உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. தேர்தலுக்கான நிலவரம் குறித்து விரைவில் ஊடகங்களுக்கு ஆணையம் விளக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதி
பீகார் தேர்தல் தேதி
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், நவம்பர் 22 ஆம் தேதிக்கு முன் தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார். மேலும், "தேர்தல் ஆணையத்தின் முழு குழுவும் இரண்டு நாட்களுக்கு பீகாரில் உள்ளது. பீகார் காவல்துறை நிர்வாகம், அமலாக்க முகமைகளின் தலைவர்கள் மற்றும் நோடல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டங்களை நடத்தினர்." என்று அவர் கூறினார். பீகாரின் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்களித்து, சத் பூஜா பண்டிகையைக் கொண்டாடுவது போலவே தேர்தல் நாளையும் கொண்டாட வேண்டும் என்று CEC குமார் வலியுறுத்தினார். மேலும், வெற்றிகரமான SIR செயல்முறைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அனைவரும் வாக்களித்து தங்கள் தங்களது தேர்தல் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என்று மேலும் கூறினார்.