தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது
இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தினம். 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்டமாக இன்று தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் மேலும் 19 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதோடு, தமிழகத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் இன்று நடைபெறும். இந்த தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஜனநாயக கடமையை ஆற்ற தயாராகிவிட்டீர்களா?!
காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த வாக்கு பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவு பெறும். இது கோடை காலம் என்பதால், அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாய்தளம், நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை வசதிகள், குழந்தைகள் பாதுகாப்பு மையம், சக்கர நாற்காலி போன்றவற்றை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி பெண் வாக்காளர்களின் வசதிக்காக 16 இடங்களில் பிரத்தியேகமான பிங்க் நிற வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் தேர்தல் நடந்து முடிந்ததும், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கும். உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தயாராகிவிட்டீர்களா?!