LOADING...
இந்தியாவில் ஜூன் முதல் எல் நினோ தாக்கம் தொடங்கும்! கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு பருவமழை குறையும்!
இந்தியாவில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் 'எல் நினோ' தாக்கம்

இந்தியாவில் ஜூன் முதல் எல் நினோ தாக்கம் தொடங்கும்! கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு பருவமழை குறையும்!

எழுதியவர் Sekar Chinnappan
May 30, 2026
11:13 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் எல் நினோ காலநிலையின் தாக்கம் இருப்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பருவமழையின் அளவு மிகக் மிகக் குறைவாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையம் தனது பருவமழை முன்னறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த அதிர்ச்சிகரமான தகவலை அவர் பகிர்ந்துள்ளார். பசிபிக் பெருங்கடலில் அவ்வப்போது ஏற்படும் இந்தத் தற்காலிக வெப்பமயமாதல் நிகழ்வு, ஒட்டுமொத்த ஆசியாவின் வானிலை அமைப்பையே தலைகீழாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது.

எல் நினோ தீவிரமடையும் காலம்

படிப்படியாக வலுவடைந்து செப்டம்பர் மாதத்தில் உச்சத்தைத் தொடப்போகும் எல் நினோவின் தீவிரக் கணக்கீடு

இந்தியாவில் ஜூன் மாத தொடக்கத்திலேயே இந்த எல் நினோ தாக்கம் ஆரம்பிக்கும் என்றாலும், ஆரம்பக் கட்டத்தில் இது சற்றே பலவீனமாகவே இருக்கும். அதன்பின்னர், ஜூலை மாத பாதியிலும் மற்றும் ஆகஸ்ட் மாதத்திலும் இது ஓரளவிற்கு மிதமான நிலையை எட்டி வலுவடையத் தொடங்கும் என்று மொஹபத்ரா விளக்கியுள்ளார். ஆனால், வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த எல் நினோ தனது முழுமையான தீவிர வலிமையைப் பெற்று இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்தியாவின் வரலாற்றுப் பதிவுகளின்படி, எல் நினோ தோன்றும் காலங்களில் பருவமழை பலவீனமடைவதுடன், கடுமையான வெப்ப அலைகளும், விவசாயத் தட்டுப்பாடுகளும் ஏற்படுவது வழக்கமாகும்.

சர்வதேச வானிலை ஆய்வு முடிவுகள்

நாசாவின் செயற்கைக்கோள் எச்சரிக்கை மற்றும் சர்வதேச வானிலை அமைப்புகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

இந்தியாவின் இந்த அபாயகரமான கவலைகளை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சர்வதேச வானிலை ஆய்வு அமைப்புகளும் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வுப் பிரிவும், சீனாவின் தேசிய காலநிலை மையமும் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலை தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளன. இதற்கிடையே, நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் தரவுகளின்படி, பசிபிக் கடலின் அடிப்பரப்பில் ஒரு பெரிய வெப்ப நீர் அடுக்கு உருவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடிதள வெப்ப அலைகள் படிப்படியாக மேலே உயர்ந்து கிழக்கு பசிபிக் பகுதிக்கு பரவுவதே எல் நினோ உருவாவதற்கான முதன்மை அறிகுறி என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement