
சென்னையில் மருந்து ஆய்வாளர் மற்றும் Coldrif உரிமையாளர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
செய்தி முன்னோட்டம்
வட இந்தியாவில் Coldrif இருமல் மருந்தை பயன்படுத்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து 1 முதல் 6 வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் மரணம் அடைந்தனர். ராஜஸ்தானிலும் பல மரணங்கள் பதிவாகியுள்ளன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இந்த குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் பயன்படுத்திய 'கோல்ட்ரிப்' என்ற இருமல் மருந்தில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 'டை எத்திலின் கிளைகால்' (Diethylene Glycol) என்ற நச்சு ரசாயனம் கலந்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.
கலப்படம்
நச்சு ரசாயனம் கலந்து தயாரித்த தமிழக மருந்து நிறுவனத்திற்கு சீல்
இந்த மருந்தை தயாரித்தது, தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 'ஸ்ரீசன் பார்மா' என்ற நிறுவனம். இதையடுத்து, விசாரணை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி, ஆலையை மூடி வைத்தது. நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், அமலாக்கத்துறை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உரிமையாளர் ரங்கநாதனின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. முறையற்ற தர சோதனைகள் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப்பின் வீட்டிலும், அண்ணா நகரில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயனின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கார்த்திகேயன், ரூ.25,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை எதிர்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.