'வேலைக்கு பணம்' மோசடி: ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் புதிதாக 'வேலைக்கு பணம்' மோசடி நடந்திருப்பதாக கூறி, அதுகுறித்து உடனடியாக விசாரிக்குமாறு மாநில காவல் துறைக்கு, அமலாக்கத்துறை (ED) கடிதம் எழுதியுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக திரட்டப்பட்ட ஆதாரங்களையும் அமலாக்கத்துறை காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த மோசடி, மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் உதவிப் பொறியாளர்கள், நகரத் திட்டமிடல் அதிகாரிகள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனமான TVH மற்றும் திமுக அமைச்சர் கே.என். நேருவின் உறவினர் சம்பந்தப்பட்ட வங்கி மோசடி வழக்கு தொடர்பான சோதனையின் போது இந்த மோசடியை கண்டுபிடித்ததாக ED கூறியது.
ஊழல்
ஊழல் விவரங்கள்
கடந்த 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடந்த தேர்வு நடைமுறையை சாதகமாக்கி, குறைந்தது 150 வேட்பாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் இடைத்தரகர்கள் மூலம் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் 'சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்' மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், அமலாக்கத்துறை இந்த விவரங்களை மாநில காவல்துறை தலைவரிடம் (HoPF) சமர்ப்பித்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு கோரியுள்ளது.
ஆதாரங்கள்
ED சமர்ப்பித்த ஆதாரங்கள் மற்றும் துறையின் பதில்
மோசடியில் போது 2024-2025 மற்றும் 2025-2026 ஆண்டுகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை கையாளப்பட்டதாகவும், சில நபர்கள் தேர்வுத் தகவல்களை முன்கூட்டியே பெற்றிருந்ததாகவும் ED கூறியது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர்கள், முறைகேடு நடந்த விதம் மற்றும் லஞ்ச பணம் பெற்றதற்கான தொடர் ஆதாரங்கள் அடங்கிய 232 பக்கங்கள் கொண்ட ஆவணத்தையும் அமலாக்கத்துறை வழங்கியுள்ளது. தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை கோரியுள்ளது. இதுகுறித்து MAWS துறைச் செயலாளர் டி. கார்த்திகேயனிடம் கேட்டபோது, அமலாக்கத்துறையின் கடிதம் குறித்து தனக்குத் தெரியாது என்றும், இந்த ஆள்சேர்ப்பு செயல்முறை எந்த முறைகேடுகளும் இன்றி முறையாகவே நடைபெற்றதாகவும் அவர் கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.