Loading...
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு
செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 30, 2026
07:48 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மற்றும் சில நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புதிய வழக்கின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள், கிடங்குகள், தனியார் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகள் என 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

முக்கிய குற்றச்சாட்டுகள்

முதல் தகவல் அறிக்கையில் உள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி. யுவராஜ் தலைமையிலான குழுவினர் சுமார் மூன்றரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), பார் உரிமங்களுக்கான டெண்டர்களில் ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில் டிமாண்ட் டிராப்டுகள் (DD) எடுத்துப் போட்டியாளர்களை வெளியேற்றியதாகவும், உரிமம் புதுப்பிக்கப்படாத பார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டும் அரசுக்கு ₹32.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து ஒப்பந்தங்கள் மற்றும் காலியான பாட்டில்கள் விநியோகத்தில் போலி பில்கள் மூலம் முறைகேடு நடந்ததாக 145 பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

விளக்கம்

"சட்டரீதியாக எதிர்கொள்வோம்": செந்தில் பாலாஜி விளக்கம்

சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "எனது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகச் சான்றிதழ் வழங்கிச் சென்றுள்ளனர். இந்த வழக்கினை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். 'மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை' என்பதே எங்கள் நிலையான நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT