பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளிர்ச்சியான வீடு: இரு பெண்களின் புதிய முயற்சி
இந்தியா ஆண்டுதோறும் 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறது. கொரோனா ஊரடங்கினால் பிளாஸ்டிக் சந்தை மிகவும் அதிகரித்துள்ளதே தவிர, அது குறைந்துவிடவில்லை. சேகரிக்கப்படாத பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பாலானவை குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு, நீர்நிலைகளை அடைத்து, தெருக்களை மாசுபடுத்துகின்றன. ஆனால் ஔரங்காபாத்தை சேர்ந்த இருவர், அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்தும் ஒரு புதிய வழியை கண்டறிந்துள்ளனர். நண்பர்களான நமிதா கபாலே மற்றும் கல்யாணி பார்ம்பே ஆகியோர் 16,000 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டைக் கட்டியுள்ளனர். தௌலதாபாத் அருகே உள்ள சம்பாஜி நகரில் கட்டப்பட்ட இந்த வீடு, கிட்டத்தட்ட 4,000 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது.
எப்படி இப்படி ஒரு ஐடியா அவர்களுக்கு வந்தது?
இவர்கள் இருவரும் மாட்டு சாணம், மண், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் 12-13 டன் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டைக் கட்டியுள்ளனர். 2020ஆம் ஆண்டில், நமிதாவும் கல்யாணியும் அவுரங்காபாத்தில் உள்ள அரசு கலை மற்றும் வடிவமைப்புக் கல்லூரியில் நுண்கலைப் படிப்பை முடித்தனர். 2021ஆம் ஆண்டில் கோவிட்-19 ஊரடங்கின் போது, அசாமின் பமோஹி கிராமத்தில் உள்ள அக்ஷர் பள்ளி, மாணவர்களுக்கான இருக்கைகளை அமைக்க காலி பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி இருந்தது. அதை கண்டபோது, இந்த நண்பர்களுக்கு அப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.