'மோடியின் குடும்பம்' என்ற முழக்கத்தை அனைவரும் கைவிடலாம் என பிரதமர் மோடி பதிவு
சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் இந்திய மக்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூக வலைதளங்களில் இருந்து 'மோடி கா பரிவார்'(மோடியின் குடும்பம்) என்ற முழக்கத்தை கைவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். Xஇல் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தேர்தலை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' என்ற முழக்கத்தை தங்களது சமூக ஊடகங்களில் சேர்த்து கொண்டனர். அதிலிருந்து நான் நிறைய வலிமையைப் பெற்றேன். இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக NDAவுக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது ஒரு வகையான சாதனையாகும். மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு அவர்கள் வழங்கியுள்ளனர்." என்று கூறியுள்ளார்.
பிரதமருக்கு குடும்பம் இல்லை என்று கூறியதால் உருவான முழக்கம்
"நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகங்களில் இருந்து 'மோடி கா பரிவார்' என்பதை இப்போது நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முழக்கங்கள் வேண்டுமானால் நீக்கப்படலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு குடும்பம் என்ற நமது பிணைப்பு வலுவாகவும், உடைக்கப்படாமலும் உள்ளது" என்று அவர் மேலும் X இல் பதிவிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம், தெலுங்கானாவின் அடிலபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமருக்கு குடும்பம் இல்லை என்று கூறியதை அடுத்து, 'மோடி கா பரிவார்' என்ற முழக்கம் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.