ட்ரோன் மூலம் குக்கிராமத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளி
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் ஹெட்டாராம் சத்னாமி என்ற மாற்றுத் திறனாளி, தனது அரசாங்க ஓய்வூதியத்தை பெற ஒவ்வொரு மாதமும் அடர்ந்த காடு வழியாக 2 கி.மீ பயணம் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், இந்த மாதம் அவர் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லாமல் போனது. ஏனெனில், பாலேஸ்வர் பஞ்சாயத்து பகுதியில் இருக்கும் பூட்கபாடா கிராமத்தில் உள்ள அவரது வீடு தேடி வந்த ஒரு ட்ரோன் அவருடைய ஓய்வூதியத்தை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறது. மருந்துகள், பார்சல்கள், மளிகை சாமான்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்க உலகம் முழுவதும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பணத்தை டெலிவரி செய்ய இந்தியாவில் ட்ரோன் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
ஒரு கிராம தலைவரின் சொந்த முயற்சி
"கிராம தலைவர் ட்ரோன் உதவியுடன் பணத்தை எனக்கு அனுப்பினார். அடர்ந்த காட்டிற்குள் இருக்கும் இந்த கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சாயத்து அலுவலகம் இருப்பதால் இந்த முயற்சி எனக்கு நிம்மதியை அளித்துள்ளது." என்று மாநிலத்தின் மதுபாபு பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் மாதாமாதம் ஓய்வூதியம் பெறும் சத்னாமி கூறியுள்ளார். சத்னாமியின் நிலைமையை அறிந்த பிறகு, தான் ஆன்லைனில் ஒரு ட்ரோனை வாங்கியதாக கிராம தலைவர் சரோஜ் அகர்வால் கூறியுள்ளார். சேவைகளை வழங்குவதற்கு அராசாங்கம் இது போன்ற வசதிகளை வழங்குவதில்லை என்றும் இது சரோஜ் அகர்வாலின் சொந்தமான முயற்சி என்றும் நுவாபாடாவின் தொகுதி மேம்பாட்டு அதிகாரி (BDO) சுபதார் பிரதான் கூறி இருக்கிறார்.