Page Loader
 'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்

 'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்

எழுதியவர் Sindhuja SM
Mar 04, 2024
10:48 am

செய்தி முன்னோட்டம்

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி 14 பயணிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஆந்திரா ரயில் விபத்து குறித்த ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் தான் அப்போது ரயில் விபத்து ஏற்பட்டது. அந்த பயணிகள் ரயில்களுள் ஒன்றின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர், விபத்து நடந்த போது, தொலைபேசியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதனால் தான் அந்த விபத்து நிகழ்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 7 மணியளவில் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி என்ற இடத்தில் ராயகடா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம் பலாசா ரயிலை பின்னால் இருந்து மோதியது.

ஆந்திரா 

கவனச்சிதறல்களைக் கண்டறிய புதிய அமைப்புகள் 

ஹவுரா-சென்னை வழித்தடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இதனால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்திய ரயில்வே செய்து வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசும்போது ஆந்திர ரயில் விபத்து குறித்து அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். "கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டே லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் கவன குறைவோடு இருந்ததால் தான் சமீபத்தில் ஆந்திராவில் ரயில் விபத்து நடந்தது. இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்கள் இருப்பதை உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம்." என்று வைஷ்ணவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.