சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்
சென்னையில் மொத்தம் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியே தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஏரிகளில் இருந்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமும் சென்னைவாசிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்திற்கு வருடாவருடம் ரூ. 885 கோடி வருவாய் வருவதாக கூறப்படுகிறது. அதன்படி குடிநீர் கழிவுநீர் வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலம் ரூ.505 கோடியும், மற்ற உள்ளாட்சிகள், தொழில்சாலைகள், லாரி குடிநீர் வழியாக ரூ.380 கோடியும் வருகிறதாம்.
கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும்
மேற்கூறியவாறு மொத்தம் 13.96லட்சம் பேர் வரியும், 9.13லட்சம் பேர் கட்டணமும் செலுத்திவருகிறார்கள். அதன்படி, கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்துமதிப்பீட்டின் அடைப்படையில் 7சதவிகிதமும், கட்டணமாக ரூ.80ம் வசூலிக்கப்படுகிறது. இதுவே வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு கட்டணம் மாறுபடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கடந்த 2ஆண்டுகளாக கட்டண உயர்வு அறிவிக்கப்படாத நிலையில், இந்த 2023-24 நிதியாண்டில் வீடுகளுக்கு 5சதவிகிதமும், வணிகம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10சதவிகிதம் குடிநீர்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் கட்டண உயர்வு செய்யப்படும் என்றும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வரியோ கட்டணமோ செலுத்த தவறினால் வட்டி வசூலிப்பதிலும் மாறுதல் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.