LOADING...
எதிரி நாட்டு பீரங்கிகளுக்கு செக்! டிஆர்டிஓவின் சோதனை வெற்றி; நகரும் இலக்கையும் விடாமல் வேட்டையாடும் இந்திய ஏவுகணை
டிஆர்டிஓவின் நகரும் இலக்கை அழிக்கும் நவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

எதிரி நாட்டு பீரங்கிகளுக்கு செக்! டிஆர்டிஓவின் சோதனை வெற்றி; நகரும் இலக்கையும் விடாமல் வேட்டையாடும் இந்திய ஏவுகணை

எழுதியவர் Sekar Chinnappan
Jan 12, 2026
06:51 pm

செய்தி முன்னோட்டம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேன்-போர்ட்டபிள் ஆன்டி-டேங்க் கைடட் ஏவுகணையை (MPATGM) திங்கட்கிழமை (ஜனவரி 12) டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனையின் சிறப்பம்சம் என்னவென்றால், அதிவேகமாக நகர்ந்து கொண்டிருந்த ஒரு இலக்கை இந்த ஏவுகணை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது. இந்திய ராணுவத்தின் பலத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்த ஏவுகணை டாப் அட்டாக் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக பீரங்கிகளின் முன்பக்கத்தை விட, அதன் மேற்பகுதி பலவீனமாக இருக்கும். இந்த ஏவுகணை விண்ணில் பாய்ந்து சென்று, பீரங்கியின் மேற்பகுதியை மேலிருந்து கீழ் நோக்கித் தாக்குவதன் மூலம் மிகக் கடினமான கவசங்களைக் கொண்ட பீரங்கிகளையும் நொடிப்பொழுதில் சிதறடிக்கும் திறன் கொண்டது.

வசதி

வீரர்களே சுமந்து செல்லும் வசதி

பகல் மற்றும் இரவு என எந்த நேரத்திலும் இதைப் பயன்படுத்த முடியும். மேன்-போர்ட்டபிள் என்பதால், இந்த ஏவுகணை அமைப்பை ராணுவ வீரர்கள் தங்களது தோள்களிலேயே சுமந்து செல்ல முடியும். இதற்குத் தனியாக வாகனங்களோ அல்லது கனரக இயந்திரங்களோ தேவையில்லை. மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் காடுகளில் போர் நடக்கும் போது, வீரர்கள் எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று எதிரி நாட்டுப் பீரங்கிகளைத் தாக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணைப்பு

இந்திய ராணுவத்தில் விரைவில் இணைப்பு

இந்த ஏவுகணையில் அதிநவீன இன்ஃப்ராரெட் இமேஜிங் சீக்கர் மற்றும் மேம்பட்ட எலக்ட்ரானிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்றைய சோதனையின் மூலம் இந்த ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பல கட்ட சோதனைகளைத் தாண்டியுள்ள இந்த ஏவுகணை, விரைவில் இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பீரங்கி எதிர்ப்புத் திறனில் இந்தியா தற்சார்பு நிலையை எட்டியுள்ளது.

Advertisement