புதிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலத்தை நடத்த ட்ராயை அணுகும் தொலைத்தொடர்புத் துறை
2024-ம் ஆண்டு காலாவதியாகவிருக்கும் ஸ்பெக்ட்ரம் பேண்டுகளின் உரிமங்களுக்கு ஏலம் நடத்துவது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (TRAI) அணுகவிருக்கிறது மத்திய தொலைத்தொடர்புத் துறை. 37GHz பேண்டு மற்றும் ரேடியோ அலைகளின் காலாவதியாகவிருக்கும் உரிமங்கள் குறித்த தகவல்களை அடுத்த சில நாட்களில் ட்ராய்க்கு அனுப்பவிருக்கிறது தொலைத்தொடர்புத் துறை. இந்த ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலமானது நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காலாவதியாகவிருக்கும் ஸ்பெக்ட்ரம் பேண்டு உரிமங்களுக்கான இந்த ஏலத்தில், கடந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கப்படாத ஸ்பெக்ட்ரம் பேண்டு உரிமங்களும் சேர்த்து ஏலம் விடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரத்திற்கான வழிகாட்டலை எதிர்நோக்கும் தொலைத்தொடர்புத் துறை:
2022-ல் 10 ஸ்பெக்ட்ரம் பேண்டுகள் ஏலம் விடப்பட்ட நிலையில், 600MHz, 800MHz மற்றும் 2,300MHz ஆகிய பேண்டுகளுக்கு ஏலம் கோரப்படவில்லை. 700MHz, 3,300MHz மற்றும் 26GHz பேண்டுகள் மட்டுமே கடந்தாண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதில் 700MHz பேண்டானது, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளின் போது அறிவிக்கப்பட்ட ஏலங்களில் கோரப்படாதது குறிப்பிடத்தக்கது. இந்த பேண்டுகளைத் தவிர்த்து செயற்கைக்கோள் இணைப்பு ஸ்பெக்ட்ரத்திற்கான வழிகாட்டல்களையும் ட்ராய் வழங்கும் என எதிர்பார்க்கிறது தொலைத்தொடர்புத் துறை. செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரத்திற்கான வழிகாட்டல்களை ட்ராய் வழங்கும் பட்சத்தில், கடைசி காலாண்டில் நடைபெறவிருக்கும் ஏலத்தில் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரங்களும் ஏலத்தில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.