Davos 2026: பிரதமர் மோடியை புகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப்; இந்தியாவுடன் நல்ல வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என உறுதி
செய்தி முன்னோட்டம்
உலக பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரதமர் மோடி ஒரு அற்புதமான மனிதர், அவர் எனது சிறந்த நண்பர். இந்தியாவுடன் நாங்கள் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறோம்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் வரிகள்
அமெரிக்காவின் முரண்பாடுகளும், மிரட்டல்களும்
டிரம்ப், மோடியுடனான 'நட்பு' குறித்து பேசினாலும், எதார்த்த நிலை சவாலானதாகவே உள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டிக்கும் விதமாக, இந்திய பொருட்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் அண்மையில் 50% அதிரடி வரி விதித்தது. மேலும், "மோடி டிரம்பிற்கு போன் செய்யவில்லை, அதனால் ஒப்பந்தம் முறிந்தது" என்று டிரம்ப்பின் வணிக செயலாளர் ஹோவர்ட் லட்னிக் குற்றம் சாட்டியிருந்தார். மற்றொரு புறம், இந்தியா மீதான வரியை 500% ஆக உயர்த்தும் மசோதாவிற்கு டிரம்ப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
நம்பிக்கை
டிரம்ப்பின் நம்பிக்கை தரும் கூற்று புதிய திருப்பத்தை தருமா?
இத்தகைய பதற்றமான சூழலில், டாவோஸில் ட்ரம்ப் மோடியை "அற்புதமான தலைவர்" என்று அழைத்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முட்டுக்கட்டை விரைவில் உடையலாம் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக 'ஏர்ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் பேசும்போது, "மோடி ஒரு நல்ல மனிதர், அவருக்கு என்னைத் தெரியும்" என்று குறிப்பிட்டிருந்த ட்ரம்ப், இப்போது நட்பு பாராட்டுவது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. தனது உரையில், "அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி உலகிற்கே நன்மை பயக்கும்" என்று குறிப்பிட்ட ட்ரம்ப், இந்தியா போன்ற முக்கியமான கூட்டாளிகளுடன் சுமூகமான வணிக உறவை விரும்புவதாகவும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.