மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை இயக்க முடியாது என்றும், அதைச் செய்வது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் வேலை என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், திங்கட்கிழமை (ஜூலை10), மணிப்பூர் நிலைமை குறித்த ஒரு சில மனுக்களை விசாரித்த போது கூறினார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் வாதத்தை முன்வைத்து பேசியபோது இந்த பதிலை அளித்தனர். குக்கி சமூகத்திற்கு ஆதரவாக மனுவை தாக்கல் செய்துள்ள மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரி வருகிறார். முன்னதாக, மே மாத முதல் மணிப்பூரில் இனக்கலவரத்தில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை
மணிப்பூரில் நிலவும் அமைதியின்மைக்கு அரசு ஆதரவு வன்முறையே காரணம் என்ற கோன்சால்வ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "மாநிலத்தில் வன்முறையை மேலும் அதிகரிக்க இந்த இடம் பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்றார். மணிப்பூரில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து தாங்கள் விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ள நீதிபதிகள், மனுதாரர்களை ஆக்கபூர்வமான பரிந்துரைகளுடன் திரும்பும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) மீண்டும் நடக்க உள்ளது. முன்னதாக, மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த நிலை அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்து, அத்தியாவசியப் பொருட்களுக்கு முக்கியமான 10 கிமீ நெடுஞ்சாலையை, தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.