மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை!
மக்களவையில் யாருடைய சாதி, மதத்தையும் குறிப்பிட்டு பேச கூடாது என்றும் மீறும் எம்பியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார். காங்கிரஸை சேர்ந்த எம்பி ஏஆர். ரெட்டி, டாலரை விட இந்திய ரூபாயின் விலைக் குறைந்திருப்பதைப் பற்றி பேசுகையில் அது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தது என்று தனக்குத் தெரிந்த இந்தியில் அரைகுறையாக பேசினார். இதைப் பற்றி ஏதோ சொல்ல வந்த சபாநாயகரிடம் "நான்தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கேன். நீங்கள் குறுக்கிடாதீர்கள்" என்று தடுத்தார். இவருக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "காங்கிரஸ் எம்பி. அரைகுறை இந்தியில் பேசியதால், அதே போல் அரைகுறை இந்தியில்தான் நானும் பதிலளிப்பேன்" என்றார்.
கடிந்து கொண்ட சபாநாயகர்!
இதற்கு காங்கிரஸ் எம்பி ஏஆர். ரெட்டி, தான் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்பதாலேயே நிதி அமைச்சர் தன்னை இப்படி விமர்சிப்பதாக குற்றம்சாட்டினார். இதை கேட்ட சபாநாயகர், மக்கள் எம்பி.க்களின் சாதி, மதத்தை பார்த்து தேர்ந்தெடுப்பதில்லை. அதனால், அவைக்குள் யாரும் எம்பி.யின் சாதி, மதத்தை குறிப்பிட்டு பேச கூடாது என்று எச்சரித்துள்ளார். மேலும், இனிமேல் யாரும் சபாநாயகரிடம் பேசும் போது ''குறுக்கிடாதீர்கள்'' போன்ற வார்தைகளை உபயோகிக்க கூடாது என்றும் கடிந்து கொண்டுள்ளார்.