நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் தி.மு.க. இடையே ஏற்பட்ட விவகாரம் போன்ற சூழல்களில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்குவதற்கான அரசியலமைப்பு சட்ட நடைமுறை குறித்து இந்திய சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. 'நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை' அல்லது 'திறமையின்மை' போன்ற காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு நீதிபதியை நீக்க முடியும்.
நடைமுறை
நீக்குதல் நடைமுறை
இந்த நடைமுறையானது, அரசியலமைப்பின் பிரிவு 124(4) மற்றும் நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968 ஆகியவற்றின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. 1. தீர்மானம் தொடங்குதல்: நீதிபதியை நீக்குவதற்கான தீர்மானம் மக்களவை அல்லது மாநிலங்களவை இரண்டில் ஏதாவது ஒன்றில் தொடங்கப்பட வேண்டும். மக்களவையில் குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும். மாநிலங்களவையில் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும். 2. விசாரணைக் குழு அமைத்தல்: சபாநாயகர் அல்லது தலைவர் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால், குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அல்லது தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட வல்லுநர் ஆகியோர் இடம் பெறுவர்.
நடவடிக்கை
குடியரசு தலைவர் முடிவே இறுதியானது
விசாரணை குழு நீதிபதி குற்றவாளி என்று கண்டறிந்தால், அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையுடன், தீர்மானத்தில் கலந்துகொண்டு வாக்களித்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்பதாகும். இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறிய பிறகு, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். குடியரசு தலைவர் அதற்கான உத்தரவைப் பிறப்பித்த பின்னரே, அந்த நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
சர்ச்சை
திமுக vs நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சர்ச்சை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சில வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் அவரது நீதிமன்ற கருத்துகள் ஆகியவை தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது. இதுவே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாகும். நீதித்துறையில் உள்ள ஒருவர் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்றும், அரசியல் சார்புடன் தீர்ப்பளிக்கிறார் என்று தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் வெளிப்படையாக விமர்சித்தன. தொடர்ந்து சமீபத்தில் திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் மதக்கலவரம் ஏற்படும் விதமாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் என திமுக விமர்சித்தது. அதனையடுத்து தற்போது நீதிபதியை நீக்குவதற்கான தீர்மானத்தை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.