"கௌமுத்ரா மாநிலங்கள்" கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்
ஹிந்தி மொழி பேசும் இந்தியாவின் இதய மாநிலங்களை, "கௌமுத்ரா மாநிலங்கள்" என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதற்கு வருத்தம் தெரிவித்து, தன் கருத்தை திமுக எம்பி செந்தில்குமார் திரும்ப பெற்றுக்கொண்டார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது, திமுகவைச் சேர்ந்த தர்மபுரி எம்பி செந்தில்குமார் நேற்று உரையாற்றினார். அப்போது, "பாஜக கௌமுத்ரா மாநிலங்கள் என அழைக்கப்படும் ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டும் வெல்ல முடியும். தென்னிந்தியாவில் வெல்ல முடியாது" என பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்த நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில், தான் பேசியது புண்படுத்தி இருந்தால் அடுத்தமுறை அந்த சொல்லை பயன்படுத்தவில்லை என கூறியிருந்தார்.
தான் பேசியதை திரும்ப பெற்றுக் கொண்டார் எம்பி செந்தில்குமார்
இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற மக்களவையில் பேசிய செந்தில்குமார், தன் வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க கேட்டுக்கொண்டார். "நேற்று நான் கவனக்குறைவாக பேசியது, உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதை நான் திரும்பப் பெற விரும்புகிறேன்." "மேலும் அந்த வார்த்தைகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன்" என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த மக்களவை சபாநாயகராக இருந்த கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி, இந்த வார்த்தைகள் ஏற்கனவே அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இது முடிந்து போன விஷயம் என்றும், அதற்கு நீங்கள் வருந்த வேண்டும் எனவும், செந்தில்குமார் இடம் தெரிவித்தார். எம்பி செந்தில்குமார் கடந்த ஆண்டும் இதே போல், "கௌமுத்ரா மாநிலங்கள்" என்ற சொல்லை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.