Loading...
தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: சென்னை - கன்னியாகுமரி, தென்காசி ரயில்கள் முன்பதிவு விவரம்
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: சென்னை - கன்னியாகுமரி, தென்காசி ரயில்கள் முன்பதிவு விவரம்

எழுதியவர் Vasuki
Nov 02, 2026
06:01 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் தாம்பரம் - தென்காசி இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் புறப்படும். மறுமார்க்கமாக நவம்பர் 9 அன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை காலப் பயணங்களுக்கான இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு நாளை (நவம்பர் 3) காலை 8 மணிக்குத் துவங்குகிறது.

ரயில்கள் நேரம்

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வண்டி எண் 06151 கொண்ட சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி ஒருவழி சிறப்பு விரைவு ரயில், வரும் நவம்பர் 5-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கன்னியாகுமரியைச் சென்றடையும்.

மறுமார்க்கமாக, வண்டி எண் 06152 கொண்ட கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயில், நவம்பர் 9-ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 11.20 மணிக்குக் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் நேரம்

தாம்பரம் - தென்காசி மற்றும் செங்கோட்டை - தாம்பரம் ரயில்கள்

தென் மாவட்டப் பயணிகளின் வசதிக்காக, வண்டி எண் 06049 கொண்ட தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் நவம்பர் 7-ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, அன்றைய தினம் மாலை 4.45 மணிக்குத் தென்காசியைச் சென்றடையும்.

இதன் மறுமார்க்கமாக, வண்டி எண் 06050 கொண்ட செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரயில் நவம்பர் 9-ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்குச் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கும் இந்த ரயில்கள் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பதால், பயணிகள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT