ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்
திமுக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் வழக்கு விசாரணையை பிப் 22ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆ.ராசாவின் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கைப் பதிவு செய்த சிபிஐ, ஆ.ராசாவுக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. 7 வருடம் நடந்த இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் இதற்கான முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா வருமானத்தை விட 579% அதிகமாக சொத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது
ஆ.ராசாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம்
579% என்பது கிட்டத்தட்ட 5 கோடியே 53 லட்ச ரூபாய் ஆகும். இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த முறை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஆ.ராசா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நேற்று(பிப் 8) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு ஆ.ராசாவை தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர். நாடாளுமன்ற கூட்ட தொடர் நடந்து கொண்டிருப்பதால் ஆஜராவதில் இருந்து ஆ.ராசாவுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ஆ.ராசா தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதை ஏற்று கொண்ட நீதிமன்றம் பிப் 22ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது.