வாடகைத் தாய்க்கான காப்பீடும்.. அதில் இருக்கும் சிக்கல்களும்!
சமீப காலங்களில் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்திருக்கிறது. முக்கியமாக பிரபலங்கள் பலரும் தங்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாடகைத் தாய் மூலமே குழைந்த பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். இந்நிலையில், வாடகைத் தாய் முறையில் வாடகைத் தாயாக செயல்படும் நபருக்கும் உரிய காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI). இந்த காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் வாடகைத்தாயாக இருக்கும் நபருக்கான செலவுகள், பிரசவத்திற்கான செலவுகள், பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்காக ஆகும் செலவுகள் மற்றும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் சிக்கல்களுக்கான செலவுகள் என அனைத்து செலவுகளையும் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது IRDAI.
சிக்கல்கள் என்ன?
வாடகைத்தாயாக இருப்பவருக்கான தனிப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறோம் என தெரிவித்திருக்கின்றன காப்பீட்டு நிறுவனங்கள். வாடகைத்தாயாக இருக்கும் நபரைக் குறித்த விபரங்களை சட்டப்படி வெளியிடக் கூடாது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் தாங்கள் காப்பீடு செய்யும் நபர் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. "காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படை நோக்கமே எதிர்பாராத நிகழ்வுகளுக்கான செலவுகளை ஏற்பது தான். ஆனால், இங்கு ஏற்கனவே கருவுற்றிருக்கும் நிச்சமான ஒரு நிகழ்வுக்கு காப்பீடு வழங்க வேண்டும்." எனத் தெரிவித்திருக்கிறார் நிபுணர் ஒருவர். "கருவுற்றிருப்பது நிச்சமான நிகழ்வு தான் எனினும், கருவுற்றிருப்பதனாலோ அல்லது பிரசவத்தின் போதோ ஏற்படும் சிக்கல்கள் நிச்சயமற்றவையே. எனவே, காப்பீட்டு நிறுவனங்கள் இதற்கான தனிப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களை வழங்கமுடியும்" எனத் தெரிவித்திருக்கிறார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் துணை-நிறுவனர்.