சுற்றுசூழலை பாதுகாக்க இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் தவிர்க்க வேண்டுமென ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களிடத்தில், இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை பக்தர்கள் இருமுடி கட்டில் எடுத்து வரும் நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் போன்ற பொருட்களை அய்யப்பனுக்கு அர்ப்பணிக்கும்போது, நெய் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர். 18 படிகள் ஏறும் போது, தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. அதேபோல அரிசி, பாயசம் வழிபாட்டு கவுண்டர்களில் நன்கொடையாக வழங்க முடியும். ஆனால், சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருட்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுவதில்லை.
பூஜை பொருட்கள் குறித்து ஏற்கனவே வேண்டுகோள் விடுத்த மேல் சாந்தி
இதனை தொடர்ந்து தந்திரி மற்றும் மேல் சாந்தி போன்றோர் பக்தர்களுக்கு இவற்றை கோவிலுக்கு கொண்டு வராமல் இருக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பல பக்தர்கள் இவை கொண்டு வந்து, மாளிகைப்புறம் அருகே விட்டு செல்கின்றனர். பின்னர், கனரக இயந்திரங்களால் இவை எடுத்துச் சென்று காட்டுப் பகுதியில் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவும் பொதுமக்களும், தேவசோம் போர்டும் வருத்தம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, வரும் சீசனில் சபரிமலை செல்லும் பக்தர்களிடத்தில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளது. சபரிமலைக்கு பக்தர்களுக்காக ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.