பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி!
பணமதிப்பிழப்புக்கு எதிரான 57 மனுக்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் சேர்ந்த அரசியல் சாசன அமர்வு வழங்கியது. இந்த 5 நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பை தனித்தனியாக வழங்கினர். கடைசியில், பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதி தீர்ப்பு முடிவு செய்யப்பட்டது. இந்த அமர்வில் இருந்த 4 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். அதாவது, பண மதிப்பிழப்பு செல்லும்' என்ற தீர்ப்பே அது. 4 நீதிபதிகள் எழுதிய தீர்ப்பில், "ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்த குறைபாடுகளும் தெரியவில்லை" என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதி நாகரத்னா மட்டும் இதில் ஒரு முரணான கருத்தைத் தெரிவித்திருந்தார்.
நீதிபதி நாகரத்னாவின் கருத்து:
ஒரே அரசாணையின் மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது தவறு. இது போன்ற முக்கியமான முடிவுகளை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல் எடுக்கக்கூடாது. மொத்த முடிவும் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் எடுக்கப்படவில்லை. பண மதிப்பிழப்பு சட்ட விரோதம் இல்லை. ஆனால், அதை செயல் படுத்திய விதம் சட்டவிரோதமானது. 98% ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனால், எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை. இதனால், ஏற்படும் பிரச்சனைகளை மத்திய வங்கிகள் கவனிக்க தவறிவிட்டன. ஆனால், இதெல்லாம் நடந்து முடிந்ததற்கு பின் இனி என்ன செய்ய முடியும்.